2020.09.20 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல்.

2020.09.20 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல்.

நன்றி - கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்


ஊவாவிலிலுந்து ஓர் உதய தாரகை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

(ஓர் எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், சிறுவர் படைப்பாளர், சஞ்சிகை துணையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர்)


செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், சிறுவர் படைப்பாளர், சஞ்சிகை துணையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள்.


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

வெண்மேகப் பஞ்சுகளாக மேகங்கள் சூழ்ந்த, சுட்டெரிக்காத இதமான வெயிலோடும் சின்னச் சின்ன மழைத் தூறல்கள் தொட்டுச் செல்லும் பனிபடர்ந்த மலைகளுக்கு மத்தியில் அமைந்த ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள தியத்தலாவை எனது ஊராகும். எனவே எனது ஊரின் நாமத்தை எனது பெயரோடு இணைத்து தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயரில் எழுதி வருகின்றேன். இதுவரை இலக்கியத்தின் பிரதான துறைகளான கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் படைப்புக்கள் போன்றவற்றில் 10 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். 2013 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை பூரணப்படுத்தினேன். அதே வருடம் இறுதியிலிருந்து கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் கணனி வடிவமைப்பாளராக சில வருடங்கள் கடமையாற்றினேன். தற்பொழுது திருமணத்தின் பின்னர் எனது ஊரோடு வசித்து வருகின்றேன்.


02. இலக்கியத் துறைக்குள் நீங்கள் நுழைந்த காலப் பகுதி மற்றும் அப்போதைய சூழல் பற்றிச் சொல்லுங்கள்?


தரம் 03 இல் கல்வி கற்கும் போதிலிருந்தே வாசிப்பில் மிகுந்த தேர்ச்சியும் ஆர்வமும் இருந்தது. எனினும் 2004 ஆம் ஆண்டில் காத்திருப்பு என்ற எனது முதலாவது கவிதை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் களம் கண்டது. அப்போதைய சூழ்நிலையில் தற்போது போன்று தொலைபேசி வசதியோ, இணையப் பத்திரிகை வசதியோ இருக்கவில்லை. காலையில் பத்திரிகைக் கடைக்குச் சென்று பத்திரிகை வாங்கி, எனது கவிதை வெளிவந்திருக்கிறதா இல்லையா என்ற தவிப்போடு பக்கங்களைப் புரட்டிய அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது.


03. உங்களது முதலாவது படைப்பு, ஊடகத்தில் வெளிவந்த அந்தத் தருணம் எப்படியிருந்தது?

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயரை முதன் முதலாகப் பத்திரிகையில் பார்த்த போது ஆயிரம் சூரியனின் பிரகாசத்தை என் உள்ளத்தில் உணர முடிந்தது. எனது பெயரையும் நாடறியச் செய்துவிட்டேன் என்ற திருப்தி, நிம்மதியாக இருந்தது. எழுத்துத் துறையில் சாதனைபுரிய வேண்டும் என்ற முனைப்பு தீவிரமாக இருந்ததால் முதல் முயற்சியின் வெற்றி அதிக மகிழ்ச்சியைத் தந்தது. 


04. இயற்கை எழில் கொஞ்சும் மலையகம் பிறப்பிடமாக அமைந்ததால்த்தான் கவிதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டதா? கவிதை எழுதும் ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

இயற்கை சூழல் இதற்கொரு முக்கிய காரணமாக அமைந்தது உண்மைதான். பதின்ம   வயதுகளில் சத்தம் சந்தடியின்றி குளிர்காற்று மேனியைத் தழுவ மொட்டை மாடியிலிருந்து எழுதிய அந்தத் தருணம் கவிதையின் அழகை முழுமையாக உணர வைத்தது. 

மனம் திறந்து உண்மையைச் சொல்கிறேன். ஆரம்பத்தில் கவிதை எழுதும் ஆற்றலை எல்லாம் வளர்த்துக்கொண்டு நான் எழுதவில்லை. எதேச்சையாக என் மனதில் தோன்றியவற்றையே எழுதினேன். அவ்வாறு எழுதியவற்றை செம்மையாக்கம் கூட செய்யாமல் தபாலட்டையில் எழுதி அனுப்பினேன். ஒரு தேர்ந்த கவிஞரின் கவிதையைப் போல இருந்ததாக பின்னாட்களில் பத்திரிகை உதவியாசிரியர் கூற மிகவும் மகிழ்ந்தேன். தொடர் வாசிப்பினால் கவிதைகளின் வீச்சு இன்னும் இன்னும் காத்திரமாக அமைந்தது. 


05. இதுவரை வெளிவந்த உங்கள் நூல் அறுவடைகள் பற்றியும் சொல்லலாமே? உங்கள் நூல் வெளியீட்டு முயற்சிகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றி?

இதுவரை இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை - 2012), வைகறை (சிறுகதை - 2012), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை - 2012), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை - 2012), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை - 2012), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை - 2013), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம் - 2013), நட்சத்திரம் (சிறுவர் பாடல் - 2014), மெல்லிசைத் தூறல்கள் (பாடல் - 2016), மழையில் நனையும் மனசு (கவிதை - 2018) ஆகிய 10 நூல்களை வெளியிட்டிருக்கிறேன்.

புரவலர் புத்தகப் பூங்கா மூலமாக இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற எனது முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்தது. அந்த அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து ஏனைய நூல்களும் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியது. அந்த வகையில் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுக்கும், கலைஞர் கலைச்செல்வன் அவர்களுக்கும், சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி அவர்களுக்கும், எனது முதலாவது நூலை அவர்களிடம் சேர்ப்பித்த படைப்பாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும், அமரர் நீர்வைப் பொன்னையன் அவர்களுக்கும், ரூம் டு ரீட் நிறுவனத்துக்கும், கொடகே பதிப்பகத்துக்கும், தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கும் என்றென்றும் எனது நன்றிகள் உரித்தாகும்.


06. கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டுபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

தங்களது வாசிப்பை இணையத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மூத்த இலக்கியவாதிகளின் நூல்கள், சங்க இலக்கியங்கள், இந்தியப் படைப்புகள், புலம்பெயர் இலக்கியங்கள் ஆகியவற்றை வாசிப்பதினூடாக நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். 


07. "வைகறை" என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்ட நீங்கள் பொதுவாக உங்களது சிறுகதைகளின் கருப்பொருட்களை எவ்வாறு தெரிவு செய்தீர்கள்?

சிலவேளைகளில் எனதும், என்னைச் சூழ உள்ளவர்களதும் அனுபவங்கள், வாசித்த, கேட்ட, கண்கூடாகக் கண்ட விடயங்கள் எனது சிறுகதைகளுக்கான கருப்பொருட்களாக அமைந்தன. அவை காதல், எதிர்பாராத அனர்த்தங்கள், இயற்கையோடு இணைந்த பிரச்சினைகள், முதலாளித்துவம், சமநீதி, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டனவாகும். 


08. நீங்கள் எழுதிய சிறுகதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை எது? ஏன்?

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை அழகான அவன் என்பதாகும். காரணம் அதுவே நான் எழுதிய முதலாவது சிறுகதையாகும். எனது சொந்த அனுபவத்தைக் கருப்பொருளாக வைத்து எழுதப்பட்ட அந்தக் கதையானது, ஒரு ரயில் பயணத்தின் போது நிகழ்ந்த சுவாரசியமான சம்பவமாக அமைகிறது. சுமார் மூன்று வயதை உடைய அழகான ஆண் குழந்தைதான், அந்த ஷஅழகான அவன்|. ஒரு இளைஞனைப் போல சித்தரித்து, இறுதியில் அது ஒரு குழந்தை என சொன்னதும் என் நண்பிகளிடம் திட்டு வாங்கினேன். அந்த சுவாரசியத்தையே எனது சிறுகதையாகப் பதிவு செய்தேன். 


09. மெல்லிசைப் பாடல்கள் பலவற்றை எழுதிய உங்கள் அனுபவங்கள் எப்படியானது? எவ்வாறான பாடல்களை எழுதியுள்ளீர்கள்?

முதன் முறையில் நேத்ரா அலைவரிசைக்காக பாடகர் டோனி ஹஸன் அவர்களுக்கு எனது  இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற பாடலை கையளித்தேன். அவர் அதற்கு இசையமைத்துப் பாடினார். இந்தப் பாடல் நேத்ரா அலைவரிசையில் ஹஜ் தினமன்று ஒளி, ஒலிபரப்பானது. அதனைத் தொடர்ந்து மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற எனது இஸ்லாமியப் பாடல், பாடகர் கலைக் கமல் அவர்கள் வெளியிட்ட மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற இசை இறுவட்டில் இடம்பிடித்தது. முகப்புத்தகத்தின் வாயிலாக சில இசையமைப்பாளர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அவர்கள் தந்த டியுன், பின்புலக் காட்சிகளுக்கு ஏற்ப பாடல்களை எழுதத் தொடங்கினேன். அவ்வாறு எழுதிய பல பாடல்களை உள்ளடக்கி எனது மெல்லிசைத் தூறல்கள் என்ற நூலை வெளியிட்டேன். எனது பல பாடல்களும் பொதுவாக காதலின்பம், காதல் பிரிவு, தாய்மை, எழுச்சி, புரட்சி, குத்துப் பாடல்கள் ஆகிய வடிவங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. 


10. நீங்கள் வெளியிட்ட சிறுவர் படைப்புக்கள் பற்றி?

ரூம் டு ரீட் நிறுவனம் பலபேரை அழைத்து பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி அவற்றிலிருந்து காக்காக் குளிப்பு, வீட்டிற்குள் வெளிச்சம், இதோ பஞ்சுக் காய்கள், மரத்தில் முள்ளங்கி ஆகிய எனது நான்கு சிறுவர் கதை நூல்களைத் தெரிவு செய்தது. தொடர்ந்து நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையில் நட்சத்திரம் என்ற எனது சிறுவர் பாடல் நூல் வெளிவந்தது. 


11. பல்வேறு வகையான நூல் விமர்சனங்களை எழுதும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை?

நூல் விமர்சனங்களைச் செய்பவர்கள் அந்தந்த நூல்களின் தன்மைகள் பற்றி மிகவும் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியம். விமர்சனம் செய்பவர், தான் அறிந்துகொண்ட விடயங்களை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட நூலாசிரியர்களின் நூலைப் பார்த்து, விமர்சனங்களை எழுதக் கூடாது.

நூலை வெளியிட்ட எழுத்தாளனின் வயது, அனுபவம், பின்புலம், திறமை போன்றவற்றை அறிந்துகொள்வது இங்கு முக்கியமான விடயமாகும். ஒரு மூத்த எழுத்தாளர், புதிய எழுத்தாளரின் படைப்புகளை விமர்சித்து அதிலுள்ள குறைகளை சொல்ல நேர்வதன் காரணம், மூத்த எழுத்தாளருக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சியாகும். எல்லோருக்கும் சம அளவு அறிவு இருக்கும் என்று கூற முடியாதே. எனவே விமர்சனங்களை எழுதும் போது நல்லவற்றைப் பொதுவெளியிலும் குறைகளை உரிய நபர்களிடமும் சொல்வதுதான் நாகரீகம் என்பது எனது நிலைப்பாடு. இதில் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்.


12. பெண்ணியம் பற்றிய உங்களது கருத்து என்ன?

தற்போதைய சூழ்நிலையில் இக்கேள்வி என்னைப் பயமுறுத்துகிறது. பெண்ணியம் என்றால் கண்ணியம் என்பது எனது கருத்தாகும். ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், பெண் விடுதலை போன்றவை எல்லாம் இன்று பெண்ணியத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. எல்லை மீறாத சுதந்திரம் அல்லது வரையறுக்கப்பட்ட சுதந்திரம் பேணி அனைவரும் நடந்துகொள்ளும் போது பெண்ணியம் என்ற சொல்லில் ஒளிந்துள்ள அச்சம் இல்லாமல் போகிறது.


13. நீங்கள் துணையாசிரியராக இருந்து சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிட்டு வந்த பூங்காவனம் சஞ்சிகை பற்றிக் குறிப்பிடுங்கள்?

பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் ஆவார். பூங்காவனம் சஞ்சிகை 2010 ஆண்டு முதன் முதலாக வெளிவந்தது. அண்மைக் காலம் வரை நேர்த்தியாக 37 இதழ்கள் வரை வெளிவந்தமை ஒரு சாதனையாகும். பல இளம் எழுத்தாளர்களையும் மூத்த எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு எமது சஞ்சிகைப் பயணம் தொடர்கிறது. நிதி  நெருக்கடி என்ற ஒரு பேயின் ஆட்டம் சஞ்சிகையின் தொடர் வரவை நிலை தடுமாற வைக்கிறது. உதவ முடிந்தவர்கள் ஊக்கமளித்தால் நிச்சயமாக எம் பயணம் தொடர்ந்து செல்லும்.


14. உங்களது எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கூற முடியுமா? வெளிவரவுள்ள உங்களது நூல்கள் பற்றியும் கூறுங்கள்?

வெளியிடுவதற்காக என் கைவசம் நான்கு தொகுதிகள் இருக்கின்றன. அவை கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் பாடல் ஆகியனவாகும். காலப்போக்கில் அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடும் திட்டம் இருக்கின்றது. 

இவ்வருடம் (2020) எப்படியாவது என் நாவலை வெளியீடு செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஏப்ரல் மாதத்தில் வெளியீடு செய்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்;. எனினும் கொரோனாத் தொற்றால் எல்லாத் திட்டங்களும் கைமீறிப் போயின. இவ்வருட இறுதியலாவது எனது நாவலை வெளியீடு செய்வதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.


15. சிறுகதைக்கும், நாவலுக்கும் இடையில் எவ்வகையான வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

சிறுகதை என்பது குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நாளில் நடந்த, நடக்கின்ற விடயங்களைச் சொல்வதாகும். சிறுகதை எழுதுவதற்காக எழுதக் கூடிய நேரமும் அப்படித்தான். ஒரு விடயத்தை மாத்திரம் கருவாகக் கொண்டு சிறுகதை எழுதப்பட வேண்டும். அதில் பொதுவாக ஒன்றிலிருந்து மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் பெரும்பாலும் காணப்படாது. சிறுகதையை வாசிப்பதற்கான நேரம் மிகக் குறைவு.

நாவல் என்பது பல விடயங்கள் பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட வேண்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட அதற்காக ஒரு ஆய்வுக்குப் போன்றே மெனக்கெட வேண்டியிருக்கிறது. அத்துடன் துல்லியமான தகவல்கள் பலவற்றையும் சேகரிக்க வேண்டியிருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொருட்களை உள்ளடக்கி நாவலின் இறுதியில் அவற்றை தொடர்புபடுத்தியே பெரும்பாலான நாவல்கள் எழுதப்படுகின்றன. நாவல்களில் சிறுகதைகளைவிட பல கதாபாத்திரங்களை உலவச் செய்வனூடாக சொல்ல வந்த விடயங்களை மிகத்தெளிவாக முன் வைக்க முடியும். வாசிப்பைப் பொழுது போக்காகக் கொண்டவர்களுக்கு நாவல் ஒரு சிறந்த தீனி. 


16. தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொள்ளலாமே?

2010 இல் முதன் முறையாக நேத்ரா அலைவரிசையின் உதய தரிசனம் நேர்காணல் நிகழ்ச்சிக்கு அதிதியாக செல்லும் போது மிகவும் தயக்கமாக இருந்தது. அன்று தான் இலங்கை ரூபாஹினிக் கூட்டுத்தாபனம் என் கண்களுக்கு விருந்தளித்தது. தொலைக்காட்சியில் பார்த்து இரசித்த பல முகங்களை நேரில் கண்டேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் பார்த்தால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தென்பட்டது. பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் நிகழ்ச்சியில் பெருநாள் கவியரங்கத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் சக்தி டீவியின் மகளிர் மட்டும் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு சக்தி எப்.எம். இன் கவிராத்திரி நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளேன். அதேபோன்று வசந்தம் டீவியின் துவானம் நேர்காணல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன். மேலும் இணைய வானொலியான சுருதி எப்.எம். இல் கலந்துகொண்டதோடு பிராந்திய வானொலியான ஊவா எப்.எம். இலும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற நேர்காணல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன். இவை யாவும் எனது இலக்கியப் பணிகளுக்காகக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்வேன்.


17. எழுத்தாளர்களின் எழுத்துக்களால் அல்லது படைப்புக்களால் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர முடியுமா?

சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எழுத்தாளர்களின் பேரவா. மாறுவதும், மறுப்பதும் வாசிப்பவர்களைப் பொருத்தது. அந்தக் காலத்தில் சமூக மாற்றங்களுக்காக எழுதப்பட்ட படைப்புகளால் துரிதமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது வாசிப்பே மழுங்கடிக்கப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலையில் "எழுத்துகளுக்கூடான மாற்றங்கள்" நிகழும் என்பது எழுமாறான விதத்திலேயே காணப்படுகின்றது.  


18. இல்லத்தரசியான தாங்களது இலக்கியப் பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது?

திருமணம் என்ற ஒரு விடயம் என் இலக்கிய விடயத்தில் எவ்வகையிலும் தலையீடு செய்யவில்லை. எனினும் பொதுவாக குடும்பப் பெண் என்ற வகையில் காணப்படும் ஏனைய பல வேலைகளில் ஈடுபாடு காட்டுவதால் முன்பு போன்று இலக்கியச் செயற்பாடுகளில் அதிக கரிசனை காட்ட முடிவதில்லை. ஊடகங்களுக்கு படைப்புக்களை அனுப்பும் வேகம் சற்றுக் குறைந்திருந்தாலும் எழுத்துத் துறையில் உள்ள ஆர்வத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அவ்வப்போது கவிதைகளை தொடர்ந்தும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். 


19. உங்கள் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

இலக்கியத் துறையில் கால் பதிக்க முன்பே பத்திரிகை வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அப்போது நான் தரம் எட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அக்காலத்தில் மறைந்த கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் மித்திரன் வாரமலரில் கலாவானம் என்ற பக்கத்தைத் தயாரித்து வந்தார். அது என்னைப் போன்று பல வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற அவா என்னுள் அடிக்கடி எழுந்தது. வருடங்கள் நகர்ந்தன. நான் இலக்கியத் துறையில் கால் பதித்த பின்பு, 2008 என்று நினைக்கிறேன் திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு எதிர்முனையில் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள், என் கவிதைகளைப் பாராட்டிப் பேசிய போது உச்சி குளிர்ந்தேன்.. உள்ளம் மகிழ்ந்தேன்.. பரவசப்பட்டேன்.. அந்த நிமிடத்தை என்னால் இன்றும் மறக்கவே முடியாது. அதன் பிறகு அவரை ஓரிரு தடவை நேரிலும் சந்தித்திருக்கிறேன். 


20. உங்கள் படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள், பட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பரிசுகள்

2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், புத்தகப் பரிசும்.

2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்.

2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்.

2012 யா. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழாவை ஒட்டி கனடா நற்பணி சங்கத்தின் அனுசரணையுடன் தேசிய மட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பதக்கமும், பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும். 

2012 மலையக சமூக ஆய்வு மையம் தேசிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் சான்றிதழ்;.

2013 தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தேசிய ரீதியாக நடாத்திய வியர்வையின் ஓவியம் - உழைக்கும் மக்கள் கலை விழா பாடல் போட்டியில் பரிசும், சான்றிதழும்.

2013 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தெஹிவலைப் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் முதலாம் இடம்.

2013 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம்.

2014 இல் கம்பன் கழகம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய தேசிய மட்ட கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம்.

2014 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தெஹிவலைப் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதை, சிறுவர் கதைப் போட்டிகளில் முதலாம்; இடமும் கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் இரண்டாம் இடமும்.

2014 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதை, சிறுவர் கதைப் போட்டிகளில் முதலாம் இடமும், கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் இரண்டாம் இடமும். 

2014 தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தேசிய ரீதியாக நடாத்திய வியர்வையின் ஓவியம் - உழைக்கும் மக்கள் கலை விழா சிறுகதை, பாடலாக்கம் போட்டிகளில் முதலாவது இடமும் பரிசும், சான்றிதழும், பதக்கமும், கவிதைப் போட்டியில் இரண்டாம் இடமும். 

2015 இல் கம்பன் கழகம் அகில இலங்கை ரீதியாக நடத்திய தேசிய மட்ட கவிதைப் போட்டியில் முதலாம்; இடம் பெற்று தங்கப் பதக்கம். 

2015 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஒன்றிணைந்து நடத்திய திறந்த கையெழுத்துப் பிரதிப் போட்டியில் ஷமழையில் நனையும் மனசு| எனும் கவிதைப் பிரதிக்கு மூன்றாம்; இடம்.

 • 2015 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதை, சிறுகதைப் போட்டிகளில் முதலாம்;; இடமும், இலக்கிய விவரணப் போட்டியில் இரண்டாம் இடமும். 

2015 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதை, பாடலாக்கம் போட்டிகளில் முதலாம் இடம். 

2015 ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை வருடாந்தம் தேசிய ரீதியாக நடாத்தும் அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஷபயணங்கள்| என்ற சிறுகதைக்காக பரிசுச் சான்றிதழ்.

2016 தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம் தேசிய ரீதியாக நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் ஷசீற்றம்| என்ற கவிதைக்காக முதலாம் இடம். 

2016 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த மட்ட சிறுகதை, பாடலாக்கப் போட்டிகளில் முதலாம்;; இடமும், இலக்கிய விவரணம், சிறுவர் கதைப் போட்டிகளில் இரண்டாம் இடமும். 

2016 தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தேசிய ரீதியாக நடாத்திய வியர்வையின் ஓவியம் - உழைக்கும் மக்கள் கலை விழா பாடலாக்கப் போட்டியில் இரண்டாம் இடமும், சிறுகதை போட்டியில் மூன்றாம் இடமும்.

2017 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த பாடலாக்கப் போட்டியில் முதலாம் இடமும் சிறுகதை, இலக்கிய விவரணம், சிறுவர் கதைப் போட்டிகளில் இரண்டாம் இடமும்.

2017 அரச இலக்கிய விழாவின் 60 ஆவது ஆண்டு வைர விழாவினை முன்னிட்டு அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த பாடலாக்கப்; போட்டியில் முதலாம் இடம்.

2018 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதை, இலக்கிய விவரணம், சிறுவர் கதைப் போட்டிகளில் இரண்டாம் இடங்கள்;.

2019 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுவர் கதைப் போட்டியில் முதலாம் இடமும் இலக்கிய விவரணம், பாடல் ஆக்கம் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடமும் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடமும்.


விருதுகள்

2013 அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது) 

2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது

2016 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது

2018 பாணந்துறை இஸ்லாமியப் பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி


21. இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

இச்சந்தர்ப்பத்தில் தினகரன் தாயின், செந்தூரப் பிள்ளைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கலைஞர்களின் அட்டைப் படத்தைத் தாங்கி அவர்களின் நேர்காணலை வெளியீடு செய்வதன் ஊடாக செந்தூரம் இணைப்பிதழ், கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதிக்கின்றது. செந்தூரம் இணைப்பிதழுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகும்.


நன்றி - கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்

Comments